மனிதி
by Gowthami Manoharan
கண்ணம்மா கொஞ்சம் நில்லடி
எங்க நீயும் போற சொல்லடி
இந்த சின்ன கண்ணில் நீயும்
கோடி ஆச வச்சு
பூமிக்கு வந்தது ஏனடி
என் சக்கரக்கட்டி நீயடி
என் சந்தனப்பொட்டும் நீயடி
எட்டி எட்டி நீயும்
தொட்டு தொட்டு பாக்க
அந்த வானம் அழைக்குது பாரடி
வாடி நீயும் வெளிய
பாத இருக்கு நிறைய
றெக்க விரிச்சு நீயும்
பறந்து செல்லடி
விழுந்தால் எழுந்து வாடி
தடுத்தால் முன்னேறிப் போடி
மிரட்டல் அதை கண்டுகொள்ளா
மனிதியாய் மாறடி
கல்வி கற்கும் பருவத்தில் நீயும்
கலவினை கற்க வேண்டாமே...
கனவுகள் காணும் நேரத்திலே
கருவினை சுமக்கவும் வேண்டாமே...
அழுது வடிந்து மடிந்தது போதும்
அடிமை சாசனம் வேண்டாமே
அத்துமீறும் அரக்கரிடத்தில்
அகிம்சை மொழியும் வேண்டாமே
ஓடி ஓடி ஒளிந்தது போதும்
ஒதுங்கி நிற்க வேண்டாமே
விதவை என்ற சொல்லுக்கு நீயும்
அடிக்கல் நாட்டவும் வேண்டாமே
மாதம் மாதம் உதிரம் உதிர்த்து
மடிந்து விழுந்திட வேண்டாமே
அன்பாய் பேசி கட்டிப்போடும்
கைவிலங்குகள் வேண்டாமே
வாடி நீயும் வெளிய
பாத இருக்கு நிறைய
றெக்க விரிச்சு நீயும்
பறந்து செல்லடி
விழுந்தால் எழுந்து வாடி
தடுத்தால் முன்னேறிப் போடி
மிரட்டல் அதை கண்டுகொள்ளா
மனிதியாய் மாறடி
சமைத்து சமைத்து விருந்தளித்து நீயும்
சரித்திரத்தை மறந்தாயோ...
சாஸ்திரங்கள் பல கற்ற
சாதனை பெண்கள் எங்கேயோ?
வேல்விழிகண்கள் தீயினால்
வேள்விகள் பலவும் செய்யலாம்
தீயவர் குலங்கள் அழியவே இனி
தீயினை ஆடையாய் அணியலாம்
போதும் போதும் இந்த யுத்தம்
எப்போ முடியும் தெரியவில்லை
மாற்றி யோசனை செய்யாமல்
மாற்றங்கள் என்றும் வருவதில்லை.
மனிதன் மனிதன் வேண்டாம் வேண்டாம்
என்று நாங்கள் நினைக்கவில்லை
மனிதி என்ற சொல்லுக்கு அர்த்தம்
இன்றும் இன்றும் கிடைக்கவில்லை
வாடி நீயும் வெளிய
பாத இருக்கு நிறைய
றெக்க விரிச்சு நீயும்
பறந்து செல்லடி
விழுந்தால் எழுந்து வாடி
தடுத்தால் முன்னேறிப் போடி
மிரட்டல் அதை கண்டுகொள்ளா
மனிதியாய் மாறடி
Published on the Writory Wall.